உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் தினசரி பக்தர்கள் அனுமதி; என்ன செய்யப் போகிறது வனத்துறை!

சதுரகிரியில் தினசரி பக்தர்கள் அனுமதி; என்ன செய்யப் போகிறது வனத்துறை!

ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையுடன் விரைவில் கலந்து பேசி, தினமும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படுமென வனத்துறை தெரிவித்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் தொடர்ந்து வழக்கில், தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும், அதற்காக அறநிலையத்துறை வனத்துறை மதுரை விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து நேற்று 50க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட பக்தர்கள் தாணிப்பாறை வந்தனர். ஆனால். அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின்படி எந்த நாள் முதல் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எழுந்துள்ளது. தினமும் பக்தர்கள் அனுமதிப்பதற்கு முன்பு அடிவாரத்தில் இருந்து கோவில் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள், வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த ஆய்வு, பல்வேறு அடிப்படை வசதிகள் செய்தல் போன்றவற்றை மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகங்கள், அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து பேசி நடைமுறையில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து அதனை சரி செய்த பின்னரே தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


அடிவாரம் முதல் கோயில் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், கரடு முரடான மலை பாதைகள், நீர்வரத்து ஓடைகளில் பாலம் இல்லாத நிலை, மழை நேரங்களில் வெள்ள அபாயம், கோடைகாலத்தில் தீ விபத்துகள், வனத்துறை ஊழியர்கள் பற்றாக்குறை, தினமும் அனுமதிக்கப்படும் பட்சத்தில் மலையில் ஏற்படும் மாசுக்கள் அதிகரிப்பு, வனவிலங்குகளால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்து தீர ஆராய வேண்டிய நடைமுறை சிக்கல்கள் வனத்துறைக்கு உள்ளது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி அதனை செயல்படுத்தினால் மட்டுமே தினசரி பக்தர்கள் அனுமதிக்கப்பட முடியும் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் என்ன செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எழுந்துள்ளது.  இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜிடம் கேட்டபோது, சடையாண்டி தொடர்ந்து வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிந்துள்ளோம். நீதிமன்றம் சுட்டிக் காட்டிய நிபந்தனைகள் குறித்து அறநிலையத்துறை மற்றும் மதுரை, விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்ட அரசு நிர்வாகத்திடம் விரைவில் கலந்து ஆலோசித்து தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !