உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. நாளை (மார்ச் 19) காலை கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடக்கிறது.


பங்குனி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை சுப்பிரமணிய சுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் பிரியாவிடை சுந்தரேஸ்வரர் அடுத்ததாக மீனாட்சி அம்மன் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர்‌. தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. திருமாங்கல்ய பூஜைக்கு பின்பு சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை பிரதிநிதியாக அசோக் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக சிவகுரு சிவாச்சாரியார் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் நடத்தினர். சுப்ரமணிய சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு மாம்பழ கலர் பட்டு சாத்துப்படி செய்யப்பட்டது. மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் மதியம் 1:17 மணிக்கு நடந்தது. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தபின்பு தீபாராதனைகள் நடந்தது.


திருக்கல்யாண நிகழ்ச்சியில் மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா கலந்து கொண்டனர்.


திருக்கல்யாண சீர்வரிசை: சோலைமலை முருகன் கோயிலில் இருந்து அறங்காவலர்கள் ரவிக்குமார், பாண்டியராஜ், செந்தில்குமார், மீனாட்சி, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் பணியாளர்கள், சுப்பிரமணிய சுவாமிக்கு வெண் பட்டு வேஷ்டி, துண்டு, தெய்வானைக்கு சிகப்பு கலர் பட்டு புடவை, மீனாட்சியம்மனுக்கு பச்சை கலர் பட்டுப் புடவை, சுந்தரேஸ்வரருக்கு வெண்பட்டு வேஷ்டி, துண்டு, பிரியாவிடைக்கு அரக்கு கலர் பட்டுப் புடவை, வளையல்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தேங்காய், பழம், பலாப்பழம், தாலிகயிறு, பருப்பு தேங்காய், பழவகைகள் சீர்வரிசையாக கொண்டுவந்தனர். நாளை காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 


பக்தர்கள் அவதி: இன்று திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். திருக்கல்யாணம் நடக்கும் திருவாட்சி மண்டபத்தில் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே அமரமுடியும். மற்ற மண்டபங்களில் பக்தர்கள் நின்று திருக்கல்யாணத்தை தரிசிப்பர். இந்த ஆண்டு பத்தர்களை கோயில் வாசலிலேயே போலீசார் தடுத்தனர். கோயில் நுழைவு மண்டபத்தில் இடமிருந்தும் கோயிலுக்குள் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதி தெருவில் கடுமையான வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !