திருப்புவனம் மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்
திருப்புவனம்; திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி வந்து நேர்த்திகடன் செலுத்தினர். திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம், திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். பத்தாம் நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி , பொம்மை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர். கோயில் வளாகத்தில் பலரும் பொங்கல், மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் நகர் பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.