1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதவப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை; வைணவ திவ்ய தேசங்களில் 35 வது கோவிலான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற கீழச்சாலை மாதவப் பெருமாள் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, திருநாங்கூரைச் சுற்றி திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களுல் 11 கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றானதும், 108 திவ்ய தேசங்களில் 35 வது கோவிலான கீழச்சாலை மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சம்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து பூஜைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 7வது கால யாக சாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. மாதவப் பெருமாள் தாயாருடன் எழுந்தருள, மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கோபுர கலசங்களுக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் தாயாருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. பூஜ்யஸ்ரீ முரளிதர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.