மனமே நீ மலைபோல் மாறிவிடு!
பக்தியும், விரதமும் நம்மைத் தூய்மைப்படுத்தி ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்கின்றன. மனத்தூய்மை இருந்தால் கண்விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாகத் தோன்றாது. பார்வையும், அறிவுக் கூர்மையும் இருக்கும் இளமைப்பருவத்தில் ஆன்மிக நூல்களைப் படிப்பது நல்லது. வயதான காலத்தில் உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்பட்ட பிறகு எதிலும் ஆர்வம் இருக்காது. பாலில் உறையிட்டு வைத்து மெதுவாகத் தயிராக்குவது போல, கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக விஷயத்தை கிரகித்துக் கொள்ளவேண்டும். ஒரே சமயத்தில் அதை அறிந்து கொள்ள முடியாது. மனிதன் எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் மனதை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறான். தரக்குறைவான எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு பரபரப்பு அடைகிறான். ஆண்டவன் தந்த மனமாகிய தோட்டத்தை அவன் பண்படுத்த வேண்டும். காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் அமர்ந்து தியானம் அல்லது வழிபாட்டில் ஈடுபடுங்கள். அது மனதை அலையவிடாமல் நிலைப்படுத்தும்.
பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், அதன் நற்பலன் எல்லை கடந்தது. இளமைக்காலம் உன்னதமான காலம். அதில் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள தேவையான அவகாசம் இருக்கிறது. வாழ்வில் வளர்ச்சி பெற நினைத்தால் இளமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் மலை போல் உறுதி நிலைத்து இருக்குமானால், எந்தச் செயலையும் விடாமுயற்சியுடன் செய்து வெற்றிச்சிகரத்தை தொட்டுவிட முடியும். மனதில் தேவையற்ற கலக்கமோ, குழப்பமோ இருக்கக் கூடாது. கம்பீரமான தோற்றம், திட்டமிடுதல், தெளிவு, பாரபட்சம் இல்லாத கண்ணோட்டம் ஆகிய நற்குணங்கள் மனதைச் செப்பனிட உதவும். உலகத்தோடு ஒட்டி உறவாடுங்கள். உலக இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால், அதற்கு அடிமையாக மாறிவிடாதீர்கள். உணவு நன்றாக இருந்தாலும் அதன் சுவை உங்களை வென்றுவிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அமைதியை நாடுகின்ற வேண்டுகோளாக பிரார்த்தனை இருக்க வேண்டும். சிறு சிறு விஷயங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நினைப்பது கொஞ்சமும் சரியாகாது.
-உறுதிவேண்டும் என்கிறார் சின்மயானந்தர்.