பரமக்குடியில் சந்திரசேகரசுவாமி - விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம்
பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்)கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஏப்.,30ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 7 கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அம்பாள் வலம் வந்தார். இன்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடன் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் முன்பு மாப்பிள்ளை வரவேற்பு நிகழ்ச்சி, திருக்கல்யாண மண்டபத்தில் கன்னிகாதானம் உள்ளிட்ட விவாக சடங்குகள் நடந்தது. காலை 10:55 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்களது மாங்கல்யத்தை மாற்றி கட்டிக் கொண்டனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினர் சார்பில் காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடந்தது. நாளை காலை 9:00 மணி முதல் சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது.