திருத்தணி முருகன் கோவில்களில் கிருத்திகை காவடி எடுத்து வந்த பக்தர்கள்
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உத்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் நடந்தது. அருங்குளம் கூட்டுச்சாலையில் சத்திய சாட்சி கந்தன் கோவிலில், மூலவருக்கு மூன்று கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலர் மொட்டை அடித்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வள்ளிமலை; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை உச்சியில் வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. நேற்று வள்ளிமலை கோவிலில், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.