உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோவில் பிரசாதம், அன்னதானம் தரச்சான்று புதுப்பிக்கப்படாததால் சர்ச்சை

மதுரை மீனாட்சி கோவில் பிரசாதம், அன்னதானம் தரச்சான்று புதுப்பிக்கப்படாததால் சர்ச்சை

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் தயாரிக்கும் இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை வழங்கிய தரச்சான்று காலாவதி ஆன நிலையில், மூன்று மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும், 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நீராவி கொதிகலன் உள்ளிட்ட உணவு தயாரிக்கும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், பக்தர்கள் வந்து செல்வதாலும் தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று பெறுவது கட்டாயம். ஆனால், கோவில் நிர்வாகம் பெறாதது குறித்து கடந்த வாரம் நம் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் உணவு தயாரிக்கும் இடத்திற்கும், பிரசாதம், அன்னதானத்திற்கும் வழங்கப்படும் தரச்சான்று காலாவதி ஆன நிலையில், மூன்று மாதங்களாக உணவும், பிரசாதமும் கோவில் நிர்வாகம் தயாரித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் சுந்தரம் கூறியதாவது:இந்திய உணவுப்பாது காப்பு, தரநிலைகள் ஆணையத்தால் பிரசாதம், அன்னதானம் தயாரிக்கும் இடத்தில் சுகாதாரம், தரம் குறித்த தரச்சான்று வழங்கப்படுகிறது. சமையல் அறையில் தயாரிக்கப்படும் உணவுகளின் நம்பகத்தன்மையை இச்சான்று உறுதி செய்கிறது. மீனாட்சி கோவில் நிர்வாகத்திற்கு, 2023ல் தரச்சான்று வழங்கப்பட்டது. இந்தாண்டு பிப்., 21ல் அச்சான்று காலாவதியானது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில், நான் கேட்டதற்கு, ஆள் பற்றாக்குறையாலும், பணிச்சுமையாலும் விபரங்களை தர முடியவில்லை என, கோவில் நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தது. உணவு பாதுகாப்பு துறையிடம் கேட்டபோது, அடுத்த 2 ஆண்டுகளுக்கான தரச்சான்று இன்னும் தரவில்லை என தெரிந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலில் உணவு, பிரசாதம் விஷயத்தில் அறநிலையத்துறை மெத்தனமாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். கோவில் தரப்பில் கூறுகையில், தரச்சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறைபடியே பிரசாதமும், அன்னதானமும் தயாரிக்கப்பட்டு வருவதால், இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !