உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷாவில் 26வது தியானலிங்க பிரதிஷ்டை தின விழா சர்வ மத இசை அர்ப்பணிப்பு

ஈஷாவில் 26வது தியானலிங்க பிரதிஷ்டை தின விழா சர்வ மத இசை அர்ப்பணிப்பு

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், தியானலிங்கத்தின் 26 ஆவது ஆண்டு பிரதிஷ்டை தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.


கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு, சத்குருவால், 1999ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரசம் வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கமாகும். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில், தியானலிங்கத்தின் 26 ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின், ஆஉம் சிவாய மந்திர உச்சாடனையுடன், பிரதிஷ்டை தின விழா துவங்கியது. தொடர்ந்து, கிறிஸ்துவ பக்தி மற்றும் சூபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினார். பின்னர், புகழ்பெற்ற தேவார பதிகங்களை மயிலை சத்குரு நாதனும், ருத்ர சமக வேத பாராயணத்தை சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். செரா மே என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் புத்த மந்திர உச்சாடனம் மற்றும் இஷால் முராதின் இஸ்லாமிய அர்ப்பணிப்பும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, குருத்வாரா சிங் சபா சார்பில் குருபானி பாடல்கள், சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் சூபி பாடல்கள் மற்றும் ஏடாகூடம் இசைக்குழுவின் சார்பில் கிறிஸ்துவ பக்தி பாடல்களும் பாடப்பட்டன. இதனைத்தொடர்ந்து, சத்குருவால் வடிவமைக்கப்பட்ட தீட்சை எனும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மிக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குருபூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !