திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவம் துவக்கம்
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளியசிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். இக்கோவிலில் இன்று ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முதல் முதல் நாளான இன்று தர்மாதி பீடத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை சேஷ வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாள் விழாவான கருடசேவை உற்சவம் நாளை நடக்கிறது. காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது. விழாவின் பிரதான நாளான வரும், 10ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு நரசிம்மர் தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.