15ம் நுாற்றாண்டு கல்வெட்டு திருப்புத்துாரில் கண்டெடுப்பு
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த புலவர் செவந்தியப்பன், விக்னேஸ்வரன் தகவல் கொடுத்தனர். வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: கல்வெட்டில் ‛‛கல்வாசல் நாட்டு, இளையாத்தகுடி யான குலசேகரபுரத்து கழனிவாசலுடையான் சிவந்த காலழகியான் சேதிபாராயர் ஊரணி’’ என, எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் இடது பக்கம் சந்திரன் பிறையும், நடுவில் உடுக்கை, வலது பக்கத்தில் சூரியனும் சிறப்பு அம்சத்துடன் பொறித்துள்ளனர். துவார் வள்ளி லிங்கம் கோவில் அருகே வள்ளி கண்மாயில் ஊரணி கரையில், நாட்டுக்கோட்டை நகரத்தார் கோவில்களில் ஒன்றான இளையாத்தகுடி பிரிவை சேர்ந்த கழனிவாசல் உடையான் சிவந்த காலழகியார் என்பவர் தர்மத்திற்காக இந்த ஊரணியை வெட்டி, மக்களின் தாகம் தீர்க்கவும், பாசனத்திற்காக கட்டியுள்ளனர் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவை 15ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என கண்டறிந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.