ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
திருவடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டனர். தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன் மற்றும் கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27 ல் தேரோட்டம், 29 ல் அம்பாள் தவசு, 30 ல் திருக்கல்யாணம், மறுநாள் சுந்தரர் கைலாச காட்சியும் நடைபெறும். விழா நாட்களில் காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம், கமல வாகனம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும்.