ஆவணி அவிட்டம்; கோவை கோவிலில் பூணூல் மாற்றும் உபாகர்மா
கோவை; ஆவணி அவிட்டமான இன்று கோவையில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல் அணிவர். இந்த நாள் வேத மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவோர்களுக்கு மிகவும் புனிதமான நாள் ஆகும். குறிப்பாக வேத பண்டிதர்கள், புரோகிதர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் பிராமணர்கள் புதிய பூணலை மாற்றுவது என்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சடங்கு முறைக்கு, ‘உபாகர்மா’ என்று பெயர். கோவை கோவில்களில் நடந்த பூணூல் மாற்றும் வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுந்தர கனபாடிகள் கலந்து கொண்டு உபவீதானம் என்று அழைக்கப்படும் பூணூல் பண்டிகையை நடத்தி வைத்தார். கோவை ராம் நகர் சதாசிவம் ஹாலில் ராமகிருஷ்ண கனபாடிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூணூல் அணிந்தனர். உபாகர்மாவில், 300க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, என, கோவில் அறங்காவலர் விசுவநாதன் தெரிவித்தார். காலை 7:00 மணி முதல் உபாகர்மா நடந்தது. முன்னோருக்குத் தர்ப்பணம் தருதல், ஹோமங்கள் நடந்தன. அசோகா பிரேமா திருமண மண்டபம், சதாசிவம் ஹால், வாணிஸ்ரீ மகால் உட்பட, கோவையில் பல்வேறு இடங்களில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. நாளை காயத்ரி ஜெபம் நடைபெறவுள்ளது. இதேபோல் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடந்தது.