ஆடி பவுர்ணமி; திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமி இரண்டாம் நாளாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையையே சிவனாக வழிபட்டு, 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் தினமும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆடி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று 8ம்தேதி மதியம் 2.43 மணி முதல் இன்று 9ம் தேதி மதியம் 2.18 மணிவரை உள்ளது. இந்த நேரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமியான நேற்று முதல் இரண்டாம் நாளாக இன்று வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து, இரட்டைப் பிள்ளையார் கோவில் பகுதியில், ஐந்து மணி நேரம் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.