உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  நாராயணா கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி, அசைந்து வந்தது.


அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆக. 1ம் தேதி காலை தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. தொடர்ந்து, ஆக. 5ல் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். ஆக. 8ல் தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்வில், இன்று காலை 8.40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், சுந்தரராச பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்குத் திருத்தேர் வடங்களைப் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.


மேலும் பக்தர்கள் மேளதாள இசையுடன் சந்தனக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இந்த திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மூலவர் கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தேர்த் திருவிழாவைக் காண மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


18ம்படி கருப்பணசுவாமி சன்னதி திறப்பு; 


அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதபவுர்ணமி தினத்தன்றுமட்டும் மாலை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படிப்பூஜை செய்து தீபாராதனை காட்டப்படும். பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு இன்று ஆக. 9 மாலை அந்நிகழ்வு நடக்கிறது.  கிராமங்களில் இருந்து 2 நாட்கள் முன்பே பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வந்து கோயில் வளாகத்தில் தங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.ஆக. 10ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !