உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. அதிகாலை முதல், இரவு வரை ஏராளமான பக்தர்கள் வந்து விநாயகரை தரிசித்தனர்.

நகரத்தார் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெறும். ஆக.18 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடத்திலும், இரவில் வாகனங்களிலும் விநாயகர் திருவீதி உலா நடந்தது. ஆறாம் திருநாளில் கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது. ஒன்பதாம் திருநாளில் தேரோட்டமும், சந்தனக்காப்பில் மூலவர் அருள்பாலித்தலும் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தங்கக்கவசத்தில் எழுந்தருளிய மூலவரையும், தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய உற்ஸவ விநாயகரையும் பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் காலை 10:00 மணி அளவில் அங்குசத்தேவர் கோயில் வலம் வந்தார். தொடர்ந்து தங்க மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகரும்,சண்டிகேஸ்வரர் திருநாள் மண்டபம் எழுந்தருளி அலங்காரத் தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் விநாயகர்,அங்குசத்தேவர் கோயில் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர். நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் முன்னிலையில்  அங்குசத்தேவருக்கு தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சார்யர், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யரால் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர்  11 வகையான திரவியங்களால் அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10:33 மணிக்கு சோமசுந்தர குருக்களால் அங்குசத்தேவருக்கு குளத்தில் மும்முறை மூழ்கி தீர்த்தவாரி வைபவம் நடந்தது. திரளாக பக்தர்கள் குளத்தைச் சுற்றிலும் கூடி தீர்த்தவாரியை தரிசித்தனர். அதிகாலையிலிருந்து கோயிலுக்கு சீரான வேகத்தில் பக்தர்கள் வருகை காணப்பட்டது. காலை 10:00 மணிக்கு மேல் பக்தர்கள் வருகை அதிகரிக்கத் துவங்கியது. பின்னர் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 18 படி பச்சரிசியால் ஆன முக்கூருணி மோதகம் எனப்படும் பெரிய கொழுக்கட்டை படையலிடப்பட்டது. மதியம் நடை சார்த்தப்படாமல் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்தது. இரவில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி வலம் வந்து விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !