நவதானியங்களால் 10 அடி உயர விநாயகர் சிலை அமைத்து சிறப்பு வழிபாடு
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி பட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் 1,700 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப் பட்டது. இதில், காணை கிராமத்தில், கம்பு, கேழ்வரகு, பெரும்பயிர், மொச்சை, துவரம் பருப்பு, பாதாம், மிளகு, ஏலக்காய், மக்காசோளம், கொண்டக்கடலை உள்பட 10க்கும் மேற்பட்ட தானியங்கள் மூலம், காகித கூழ் விநாயகர் சிலை மீது ஒட்டி 10 அடி உயரத்தில் வடிவமைத்து சிலையை உருவாக்கினர். கடந்த 10 நாட்களாக தயார் செய்யப்பட்ட இந்த விநாய கர் சிலையை வடிவமைக்க 600 கிலோ நவதானியங்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த சிலைக்கு, பொதுமக்கள் முன்னிலையில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. விவசாயம் செழிக்கவும், இயற்கை சூழலை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சிலையை கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கியதாகவும், கடந்த 5 ஆண்டுகளாகவே இது போன்ற நவதானிய விநாயகர் சிலையை தயார் செய்து மக்கள் பூஜித்து வருவதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இந்த நவதானிய விநாயகர் சிலை அவ்வழியே காண்போரின் கண்களை வெகுவாக கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.