திருவொற்றியூர் எல்லையம்மனுக்கு ரூ.5 கோடியில் புது கோவில்
திருவொற்றியூர்; திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில், சாலை மட்டத்தை காட்டிலும் தாழ்வாக இருந்தது. இதனால், மழையின் போது பாதிக்கப்பட்டது. அதை சீரமைக்க வேண்டும் என, பக்தர்களின் கோரிக்கையை அடுத்து, உபயதாரர் பங்களிப்புடன் புது கோவில் கட்ட ஹிந்து அறநிலையத் துறை தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கருங்கல் பிரகார மண்டப கட்டுமானம், 1.42 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. 25 லட்சம் ரூபாயில் மூலவர் சன்னதி, 10 லட்சம் ரூபாயில் மூலவர் விமானம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. மேலும், 1.42 கோடி ரூபாய் செலவில் முக மண்டபம் பிரமாண்டமாக அமையவுள்ளது. மேற்கண்ட பணிகள் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்பீடில் அனைத்து பணிகளும் முடித்து, வரும் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.