உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சன்னதி வீதி மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நடுநாட்டு திருப்பதி, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கான வசதியும், பாதுகாப்பும், புராதான கோவிலின் பெருமையை காட்சிப்படுத்தும் வகையிலான கட்டமைப்பும் இருக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.
கிழக்கு பெரிய கோபுரம், சன்னதி வீதியின் நுழைவு வாயிலாக உள்ளது. இதனைக் கடந்து சன்னதி வீதிக்குள் நுழைந்தாள், சாலையின் இரு பக்கமும் 15 அடிக்கும் அதிகமான தூரத்தில் நிரந்தர கான்க்ரீட் ஆக்கிரமிப்புகள் சாலையை கபிலிகரம் செய்து கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி சாலையின் இரு பக்கமும் தள்ளுவண்டி உள்ளிட்ட வியாபாரிகள் ஒரு பக்கம். மறுபுறம் வெளியூர் பக்தர்களின் கார்கள். இதனால் நடந்து செல்லும் பக்தர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை தினசரி நீடிக்கிறது. ஆக்கிரமிப்புக்கு சாட்சியாக சன்னதி வீதியின் இரண்டு பக்கமும் நான்கு கால்களுடன், மேலே விமானங்களுடன் கூடிய எட்டு உரியடி மண்டபங்கள் வீதிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. இது மறையும் அளவிற்கு ஆக்கிரமிப்புகள் நீண்டு இருப்பதை பார்த்தாலே ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு நீண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகும்.
இதையும் தாண்டி சென்றாள் கோவிலின் நுழைவு பகுதி 16 கால் மண்டபம் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் கடைகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதைத் தாண்டி கம்பீரமாக நிற்கும் 15 நூற்றாண்டுகள் பழமையான ராஜகோபுரத்தின் இரண்டு பக்கமும் உயர்ந்து நிற்கும் மதில் சுவர்கள் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவிலின் சுற்று சுவராக அமைந்திருக்கிறது. சுற்று சுவரை சுற்றி கடைகளும் ,தனி நபர்களின் வீடுகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளால் கோவிலின் அழகை ரசிக்க முடியாதது ஒரு பக்கம் பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மறுபக்கம். தற்பொழுது கோவிலின் முன்பக்க ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பொழுதே கோயிலின் முகப்பு பகுதி, மதில் சுவரை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் கார் உள்ளிட்ட வாகனங்களை பயணிகள் வசதியாக நிறுத்த முடியும். சன்னதி வீதியில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை ஏற்படுத்துவதன் மூலம் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வர முடியும்.
அதேபோல் ஐந்து முனை சந்திப்பில் தேர் வடம் போக்கி என்ற பெயரில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் விஸ்தாரமாக செல்வதற்கு வசதியாக கோவில் பெயரில் இடம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து கடைகள் கட்டி வைத்துள்ளனர். இதனால் ஐந்து முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவில் நிர்வாகம் தேர் வலம் வரும் போது மட்டுமல்ல, கோவிலுக்கு வரும் வாகன ஓட்டிகளும் சிரமமின்றி செல்வதற்கு இப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புளை அகற்றி வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தலாம். இது குறித்து பக்தர்கள் தரப்பிலும் நீதிமன்றம் வரை சென்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் வருவாய் துறை அகதிகாரிகளுக்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சன்னதி வீதியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதன் பிறகு கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து அவற்றை கோவிலின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும், நகராட்சி நிர்வாகமும் துணை நிற்க வேண்டும் என்பதே பக்தர்கள் மட்டுமல்லாது பொது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.