கோயில் பூஜைக்கு குலசேகரப்பாண்டியன் கொடுத்த செப்புப்பட்டயம் கண்டெடுப்பு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் கமுதக்குடி சுந்தரவல்லியம்மன் கோயில் பூஜைக்கு மன்னர் குலசேகரப்பாண்டியன் கொடுத்த 407 ஆண்டு பழமையான செப்புப் பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுந்தரவல்லியம்மன் கோயில் பூஜாரி தங்கவேலுவிடம் ஒரு செப்புப் பட்டயம் இருப்பதாக கமுதக்குடி சுப்பிரமணியன் தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: செப்புப் பட்டயத்தில் உள்ள எழுத்தமைப்பைக் கொண்டு இதன் காலம் கி.பி.1618 எனலாம். இதில் கமுதக்குடி ஊரின் பெயர் கமுதாபுரி என உள்ளது. மன்னர் குலசேகரப் பாண்டியன் எழுதிய இந்த பட்டயத்தில் கமுதாபுரி மேலேந்தல் அருகில் கண்மாய் கீழ்மடை பாசன பகுதி நிலத்தை தானமாக கமுதக்குடி பிடாரி சுந்தரவல்லி பராசக்தி கோயில் நித்திய பூஜைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1618-ம் ஆண்டில் வானர்வீரவகை வளநாடு எனப்படும் இப்பகுதியை குலசேகரபாண்டியன்ஆட்சி செய்திருக்கலாம். இவ்வூர் அருகில் மேலப்பெருங்கரை கோயிலில் உள்ள 1674-ம் ஆண்டு கல்வெட்டின் படி திருமலை சேதுபதியின் காலத்திற்கு முன்பு வரை பாண்டியர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.