நவராத்திரி துவக்கம்.. ஒன்பது நாள் அம்மன் அலங்காரமும்.. வழிபாட்டு முறையும்!
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. ‘நவம்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்பது’ என்றும், ‘புதியது’ என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டினர். ஒரு நாளை பகல், இரவு என பிரிப்பர். பகல் பாதி சிவபெருமானின் அம்சம். இரவு பாதி பராசக்தியின் அம்சம். எனவே தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு காலமாகும். பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி, அமைதியாக உறங்கச்செய்து தாலாட்டுகிறாள். எல்லா உயிர்களும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றை காப்பாற்றுகின்றாள். ‘சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதி! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன்’ என்கிறது வேதம். வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவதற்கான காரணத்தை புராணங்கள் சொல்கின்றன. மது,கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து பராசக்தியிடம் தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்ய புறப்பட்ட ராமர் வெற்றிக்காக, தேவியை வழிபாடு செய்தார். இதனால் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியை ஒன்பது வடிவங்களில் மக்கள் வணங்குகின்றனர்.
நவராத்திரி அலங்காரம்
முதல்நாள்
அலங்காரம்: மகேஸ்வரி. (மது, கைடபர் என்ற அசுரர்களை வதம் செய்வது போல்)
கன்னி பூஜை: இரண்டு வயது சிறுமியை குமாரி என்னும் அம்பிகையாக பாவித்து வணங்குதல்.
கோலம்: அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்
பூக்கள்: மல்லிகை, செவ்வரளி, வில்வ மாலை
நைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்,மொச்சை, பருப்பு வடை.
வழிபாட்டின் பலன்: செல்வ வளம் பெருகுதல், தீர்க்காயுள்.
இரண்டாம் நாள்
அலங்காரம்: ராஜராஜேஸ்வரி (மகிஷாசுரனை வதம் செய்வது போல்)
கன்னி பூஜை: மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்
கோலம்: கோதுமை மாக்கோலம்
பூக்கள்: முல்லை, துளசி, சாமந்தி, சம்பங்கி மாலை
நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரை
வழிபாட்டின் பலன்: நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்.
மூன்றாம் நாள்
அலங்காரம்: வராகி (பன்றி முகம் கொண்டவள்)
கன்னி பூஜை: நான்கு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குதல்
கோலம்: மலர்க்கோலம்
பூக்கள்: செண்பக மலர் மாலை.
நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி (தட்டாம்பயறு) சுண்டல்
வழிபாட்டின் பலன்: குறையில்லாத வாழ்வு அமைதல்.
நான்காம் நாள்
அம்பிகை: மகாலட்சுமி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்
பூஜை: ஐந்து வயது சிறுமியை ரோகிணியாக பூஜித்தல்
கோலம்: அட்சதை கோலம்
பூக்கள்: செந்தாமரை, ரோஜா மாலை
நைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்
வழிபாட்டின் பலன்: கடன் தொல்லை தீருதல்.
ஐந்தாம் நாள்
அலங்காரம்: மோகினி வடிவம்
கன்னி பூஜை: ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்
கோலம்: கடலைமாவு கோலம்
பூக்கள்: கதம்பம், மரிக்கொழுந்து மாலை
நைவேத்யம்: பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்
வழிபாட்டின் பலன்: விருப்பம் நிறைவேறும்
ஆறாம் நாள்
அலங்காரம்: சண்டிகா தேவி, சர்ப்ப (பாம்பு) ஆசனத்தில் வீற்றிருப்பது போல்.
கன்னி பூஜை: ஏழு வயது சிறுமியை காளிகாம்பளாக எண்ணி வழிபடுதல்
கோலம்: கடலை மாவு கோலம்
பூக்கள்: மரிக்கொழுந்து, செம்பருத்தி, சம்பங்கி மாலை.
நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகை, பாசிப்பயறு சுண்டல்
வழிபாட்டின் பலன்: கவலை தீர்தல், வழக்கில் வெற்றி கிடைத்தல்.
ஏழாம் நாள்
அலங்காரம்: சாம்பவி துர்க்கை, பீடத்தில் அமர்ந்திருப்பது போல்.
பூஜை: எட்டு வயது சிறுமியை பிராஹ்மியாக நினைத்து வழிபடுதல்
கோலம்: மலர்க்கோலம்
பூக்கள்: மல்லிகை, முல்லை மாலை
நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டு
வழிபாட்டின் பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்
எட்டாம் நாள்
அலங்காரம்: நரசிம்ம தாரிணி, சிங்க முகத்துடன் அலங்கரித்தல்
பூஜை: 9 வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்
திதி: அஷ்டமி
கோலம்: தாமரை மலர்க்கோலம்
பூக்கள்: வெண்தாமரை, சம்பங்கி மாலை
நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை.
வழிபாட்டின் பலன்: பிள்ளைகள் நல்ல பழக்கங்களுடன் வளர்தல்.
ஒன்பதாம் நாள்
அலங்காரம்: பரமேஸ்வரி, திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்
பூஜை: பத்து வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்
கோலம்: வாசனைப் பொடிக்கோலம்
பூக்கள்: துளசி, மல்லிகை, பிச்சி, தாமரை, மரிக்கொழுந்து மாலை
நைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் சேர்த்த பாயாசம், கேசரி, எள் உருண்டை
வழிபாட்டின் பலன்: குடும்பமும், நாடும் நல்வாழ்வு பெறுதல்
பத்தாம் நாள் (விஜயதசமி)
அலங்காரம்: விஜயா, பார்வதியின் ஸ்துால வடிவம்
கோலம்:மலர்க்கோலம்
பூக்கள்: பலவித மலர் மாலை
நைவேத்யம்: பால் பாயாசம், இனிப்பு வகைகள், சித்ரான்னம்
வழிபாட்டின் பலன்: சகல சவுபாக்கியம்
குறிப்பு: இந்த நாட்களில், மேற்கண்ட அலங்காரங்கள் செய்ய முடியாத பட்சத்தில், அலங்காரம் செய்ததாக மனதில் பாவனை செய்து கொண்டாலே போதும்.