உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் தினமலர் அ...னா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்... கோலாகலம்

மதுரையில் தினமலர் அ...னா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்... கோலாகலம்

மதுரை; மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கு கலைமகள் சரஸ்வதி தேவி ஆசியுடன் கல்விக் கண் திறந்து வைக்கும் அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தாவனம் நிர்வாகத்திற்கு உட்பட்டது) கோலாகலமாக நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் விஜயதசமி நன்னாளில் நெல்மணிகள் மீது குழந்தைகளின் பிஞ்சுக் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பள்ளி வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் கல்விக் கோயிலுக்குள் செல்லும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்களின் செல்லக் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.ஏற்கனவே முன்பதிவு செய்த பெற்றோருக்கு தினமலர், மஹன்யாஸ் சார்பில் வித்யாரம்பத்திற்கு தேவையான தேங்காய், பழம், தாம்பூலம் தட்டு, பச்சரிசி, இனிப்பு, வெற்றிலை பாக்கு, ‘சீமா’ நோட்புக் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டன. ஆறு சுற்றுகளாக பெற்றோர் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், வித்யாரம்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அதில் அரிச்சுவடியை ஆரம்பிக்கும் முன் பெற்றோர் ஓம்... எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டிக்கொண்டார். தாம்பூலத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த பச்சரிசியில் குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து பெற்றோர் அனா எழுதி பழகிக்கொடுத்தனர்.அப்போது ஸ்தல அர்ச்சகர், சரஸ்வதி, விரும்பியவற்றை தருபவளே, நான் கல்வி கற்க ஆரம்பிக்கிறேன். நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும் என பெற்றோரிடையே கூறி, உங்கள் குலதெய்வத்தை நினைத்துக்கொண்டு, கல்விக்கடவுள் சரஸ்வதியை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் முதலில் ஆசீர்வதியுங்கள் என கேட்டுக்கொண்டார். அதையடுத்து பெற்றோர் தங்கள் செல்லக் குழந்தைகளை மனமுருகி ஆசீர்வதித்தனர்.தினமலர் நாளிதழுக்கு நன்றிபின், கலைமகள் சரஸ்வதியின் பரிபூரணம் கிடைத்து ஒவ்வொரு குழந்தையும் கல்வி, கேள்வி, ஞானம்,. வைராக்கியம் போன்ற பேறுகள் பெறுவர் என அர்ச்சகர் வாழ்த்தினார். குழந்தைகளுடன் பெற்றோர், பாட்டி, தாத்தா என உறவினர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களின் சுட்டிக் குழந்தைகளின் அரிச்சுவடி ஆரம்பத்தை கண்கொட்டாமல் ரசித்து பெருமைப்பட்டு, இந்நிகழ்ச்சியை நடத்திய தினமலர் நாளிதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்து சென்றனர்.இந்நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாக அறங்காவலர் மதுராந்தக நாச்சியார் ராணி அனுமதியுடன் கண்காணிப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் உறுதுணையாக இருந்தனர். திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் பெற்றோர், குழந்தைகள் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளை தினமலர் நாளிதழ் செய்தது. இந்நிகழ்ச்சிக்கு பவர்டு வை ஸ்பான்சர் அம்மன் உயர்தர சைவ உணவகம். கோ ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ.,பள்ளி, மதுரை ஸ்ரீநர்சீங் ஸ்வீட்ஸ் லிமிடெட், கார்த்திகா அண்ட் கோ, பி.ஜி., நாயுடு ஸ்வீட்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !