உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசையில் தசரா விழா கோலாகலம்; சப்பரங்கள் அணிவகுப்பு

குலசையில் தசரா விழா கோலாகலம்; சப்பரங்கள் அணிவகுப்பு

துாத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த மகிஷா சூரசம்ஹாரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.


துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா, செப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்களாக, தினமும் இரவில், பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் வேடமணிந்து, முத்தாரம்மனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு நடந்தது. இதற்காக, சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன் முத்தாரம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வெள்ளத்தில், சிம்ம வாகனத்தில் அம்பாள் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரைவந்தடைந்தார். முதலில், தன்முகமாக வந்த மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக சிங்க முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘ஓம் காளி, ஜெய் காளி’ என கோஷம் எழுப்பினர். 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதே போன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் ராமசாமி கோவில் திடலில் நடந்த தசரா விழாவில், பல்வேறு அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !