உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குகைக்குள் தண்ணீரில் நின்றபடி சுவாமி தரிசனம்

குகைக்குள் தண்ணீரில் நின்றபடி சுவாமி தரிசனம்

பீதர் மாவட்டம், மங்கலபேட் பகுதியில் உள்ள மல்காபூர் சாலையில் அமைந்து உள்ளது ஸ்ரீ சேத்திர ஜரனி நரசிம்மர் கோவில். இந்த கோவில் பீதர் நகரிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ளது. இது, ஹிந்து மதத்தின் முக்கிய கடவுளான விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்காக அர்ப்பணிக்கப்பட்ட, 500 ஆண்டுகள் பழமையான குகை கோவிலாகும். 300 மீட்டர் நீளமுடைய குகையினுள் தண்ணீரிலே நடந்து சென்று சுவாமி தரிசிக்கும் வகையில் உள்ள அதிசய கோவிலாகும்.


இந்த கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகரை வேண்டிக் கொண்டு, கோவிலுக்குள் செல்லலாம். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன. பக்தர்கள் எடுத்து வரும் பைகளை வைப்பதற்கு, 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவிலினுள் நுழைவதற்கு ஒரு நபருக்கு தலா 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இங்கு வரும் பக்தர்கள் இதய பிரச்னை, மூச்சு திணறல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதியவர்கள் குகைக்குள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை பொருத்தி உள்ளது.


குகைக்குள் நேரடியாக செல்ல வேண்டியது தான். இந்த குகையின் நீளம் 300 மீட்டர். இந்த குகையில் எப்போதும் நீர் இருக்கும். நீரின் ஆழம் 2.5 அடி முதல் 4 அடி வரை உள்ளது. எனவே, குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்கள் தங்கள் தோள்களில் குழந்தைகளை அமர வைத்து அழைத்து வருகின்றனர். குகையினுள் வெளிச்சத்திற்காக மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.


புராண கதை இந்த கோவிலின் மூலவரான விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மர், சிவனின் பக்தரான ஜலகாசூரன் என்ற அசுரனை வதம் செய்தார்.


அப்போது, ஜலகாசூரன், தான் வசித்த குகையினுள் வந்து குடிகொண்டு, இங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என நரசிம்மரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, குகையில் சுயம்பாக நரசிம்மர் எழுந்தருளினார் என, தல வரலாறு கூறுகிறது.


இப்படிப்பட்ட நரசிம்மரை நீரில் நடந்தவாறே சென்று தரிசிக்கலாம். தரிசனம் செய்யும் இடத்தில் 10 பேர் மட்டும் நிற்கக்கூடிய அளவில் உள்ளது. இவர்கள் தரிசனம் செய்த பின்னரே, மற்றவர்கள் தரிசனம் செய்ய முடியும். மூலவரை தரிசித்த பிறகு, அருகில் இருக்கும் சிவ லிங்கத்தையும் வழிபடலாம். இந்த சிவ லிங்கமே அரக்கன் ஜலகாசூரன் வழிபட்ட சிவ லிங்கம் என நம்பப்படுகிறது.


மருத்துவ குணம் தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறியதும், கோவில் வளகாத்தில் உள்ள உடை மாற்றும் அறையினுள் சென்று, உடைகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் வர வேண்டியும் வருகின்றனர்.


இதுவரை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது சிறப்பு. இந்த குகைக்குள் இருக்கும் தண்ணீர் மருத்துவ குணமுடையது எனவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் 365 நாட்களும் தண்ணீர் இருக்கும் என்பது மற்றொரு சிறப்பு.


கோவில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யலாம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நரசிம்ம ஜெயந்தி, தீபாவளி போன்ற நாட்களில் அன்னதானம் வழங்கப்படும். தினமும் அபிஷேகம், மஹா மங்களாரத்தி போன்றவை செய்யப்படும்.


எப்படி செல்வது?


ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து பீதருக்கு ரயில் மூலம் செல்லவும். அங்கிருந்து பஸ் அல்லது டாக்சி மூலம் கோவிலை அடையலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !