மதுரை கூடலழகர் கோவிலில் ஐந்து கருடசேவை; பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக பால்குடங்கள் எடுத்துவரப்பட்டு, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசிமாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு. இவ்விழாவானது இன்று மாலை 7 மணிக்கு கூடலழகர் கோவில் முன்புறம் ஐந்து கருட சேவை ஆனது நிகழ இருக்கிறது. முன்னதாக இன்று பாலாபிஷேக கட்டளை சார்பாக பால்குடங்கள் எடுத்துவரப்பட்டு, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று இதில் கூடல் நகர் திருக்கோவிலிலிருந்து கருட வாகனத்தில் இரண்டு உற்சவர்களும், வீரராகவ பெருமாள் திருக்கோவிலிலிருந்து இரண்டு உற்சவர்கள் கருட வாகனத்திலும், மேலும் மதனகோபால சுவாமி திருக்கோவிலிலிருந்து கருட வாகனத்தில் ஒரு உற்சவரும் இரவு அருள்பாலிக்க உள்ளனர்.