திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் இன்று புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். பின், தேர்வீதியில் வீதியுலா வந்தார். கிருத்திகையையொட்டி, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஒன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பள்ளிப்பட்டு நெல்லிக்குன்றம் சுப்ரமணி சுவாமி கோவிலில், காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உத்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு உத்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்புறப்பாடு எழுந்தருளினார். அதேபோல், நெடியம் செங்கல்வராய சுவாமி கோவில், கரிக்கல் குமரேசகிரி முருகர் கோவில்களிலும் இன்று கிருத்திகை உத்சவம் நடந்தது.