அரச மரக்கன்றுகள் வழங்கி தருமபுரம் ஆதீனம் மற்றும் பேராவூர் ஆதினம் அருளாசி
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் ஒரு கிராமம் ஒரு அரசமரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு துவக்கி வைத்து கிராமங்களுக்கு அரச மரக்கன்றுகள் வழங்கி தருமபுரம் ஆதீனம் மற்றும் பேராவூர் ஆதினம் அருளாசி வழங்கினர்.
பேராவூர் ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அறுபதாம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு ஈஷா காவிரி கூக்குரல் நிறுவனர் சத்குரு வழிகாட்டுதல் படி ஒரு கிராமம் ஒரு அரசமரம் நடும் விழா இன்று துவங்கியது. தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக பேராவூர் ஆதீனம் 25 வது குருமகா சன்னிதானம் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்.
விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது: சிவபெருமான் நஞ்சை உட்கொண்டு விட்டு அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார். அதுபோல் மரங்கள் கார்பன் டையாக்சைடு உள்ளே இழுத்துக் கொண்டு சுத்தமான ஆக்சிஜனை நமக்கு வழங்குகிறது. பண்டைய காலத்தில் இறைவனை மட்டுமே வணங்கி பதிகங்கள் பாடிய நாயன்மார்கள் கூட மரங்களை இறைவனாக வழிபட்டு பதிகங்களை இயற்றியுள்ளனர். நாம் ஒரு கோவில் கட்டி குடமுழுக்கு செய்வதை காட்டிலும் அதனால் கிடைக்கும் புண்ணியத்தை காட்டிலும் ஒரு மரம் நடுவது மிகவும் சிறந்தது. மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது சொர்க்கத்திற்கு வழிகாட்டும். மரத்திற்கு தண்ணீர் ஊற்றாதவர்கள் எந்த புண்ணியம் செய்தாலும் அதற்கு பலன் இல்லை அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என திருமந்திரம் கூறுகிறது.ஆகவே ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுங்கள் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள் அதுவே சிறந்தது என்றார். தொடர்ந்து ஒரு கிராமம் ஒரு அரசமரம் நடும் திட்டத்தினை துவக்கி வைத்து மூன்று கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அரச மர கன்றுகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து வனதுர்கை ஆலய வளாகத்தில் அரசமர கன்றுகள் நடப்பட்டது.