இன்று தேய்பிறை அஷ்டமி; அகிலம் முழுதும் எத்தனை பைரவர்கள் அருள்கின்றனர் தெரியுமா?
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும். இன்று தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும். காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று ராகுவேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) வழிபடுவர். எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்க இவரை வழிபடுவர். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள்.
சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று. காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன. எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட (எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.
அவை.. நீலகண்ட பைரவர், விஷாலாக்ஷ பைரவர், மார்த்தாண்ட பைரவர், முண்டனப்பிரபு பைரவர், சுவஸ்சந்த பைரவர், அதிசந்துஷ்ட பைரவர், கோர பைரவர், சம்ஹார பைரவர், விஷ்வரூப பைரவர், ஞானாரூப பைரவர், பரம பைரவர், தண்டவகர்ண பைரவர், சுதாபாத்ர பைரவர், சீரீட பைரவர், உன்மத்த பைரவர், மேகநாத பைரவர், மனோவேக பைரவர், க்ஷேத்ரபாலக பைரவர், விருபாக்ஷ பைரவர், கராள பைரவர், நிர்பய பைரவர், சுவர்ண பைரவர், பிரேக்ஷத பைரவர், லோகபால பைரவர், கதாதர பைரவர், வஜ்ரஹஸ்த பைரவர், மஹாகால பைரவர், பிரகண்ட பைரவர், பிரளய பைரவர், அந்தக பைரவர், பூமிகர்ப்ப பைரவர், பீட்சன பைரவர், வினாஷின பைரவர், குலபால பைரவர், ருண்டமாலா பைரவர், ரத்தாங்க பைரவர், பிங்களேஷ்ண பைரவர், அப்ரரூப பைரவர், தாரபாலன பைரவர், பிரஜாபாலன பைரவர், குல பைரவர், மந்திர நாயக பைரவர், சிவ பைரவர், பிரம்ம பைரவர், விஷ்ணு பைரவர், வடுகநாத பைரவர், கபால பைரவர், பூதவேதாள பைரவர், திரிநேத்ர பைரவர், திரிபுராந்தக பைரவர், வரத பைரவர், பர்வத வாகன பைரவர், சசி வாகன பைரவர், கபால பூஷண பைரவர், சர்வவேத பைரவர், ஈசான பைரவர், முண்டாக்தாரிணி பைரவர், சர்வபூத பைரவர், கோரநாத பைரவர், பயங்க பைரவர், புத்திமுக்தி பயப்த பைரவர், காலாக்னி பைரவர், மஹாருத்ர பைரவர், தக்ஷிணா பிஷ்திதி பைரவர் என்பதாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.