உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை உணரத்தான் முடியும்.. பார்க்க யுகம் போதாது; துணை ஜனாதிபதி பேச்சு

இறைவனை உணரத்தான் முடியும்.. பார்க்க யுகம் போதாது; துணை ஜனாதிபதி பேச்சு

தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் மடத்தில் நடந்த, சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழாவில், இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்களால் பார்க்க நமக்கு இந்த யுகம் போதாது என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவின் துவக்கமாக, குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.‌ தொடர்ந்து, தேசியகீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இவ்விழாவில், பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து, ஆசியுரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருக்கு, பொன்னாடை போர்த்தி, மயில் தோகை மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கவுரவித்தார். தொடர்ச்சியாக, 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருவுருவ படத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, வழிபட்டார். விழா நிறைவடைந்தபின், பேரூர் திருமடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு நடத்தினார். இவ்விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் தலைவர் நல்லா ஜி பழனிசாமி, ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில்,"எந்தக் கடமையையும், உள்ளபூர்வமாக, உணர்வுபூர்வமாக, ஈடுபாட்டோடு செய்பவர்கள் ஒருபோதும் குறிப்பு வைத்துக் கொண்டதாக வரலாறு இல்லை. பேரூர் என்றாலே புனிதம். அந்த புனிதத்திற்கு புனிதம் சேர்க்கின்றது பேரூர் ஆதினம். விளம்பர யுகத்தில், எந்த விளம்பரத்திற்கும் அடிபோகாமல் இருக்கின்ற ஒரே ஆதினம், பேரூரதினம். தனிநபர் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஆதினத்திற்கு வரலாம். ஆதினத்திற்கே பிரச்சனை என்றால், பேரூர் ஆதினத்திற்குதான் வர வேண்டும். நம்பிக்கைதான் வெற்றி அடையாளம். கடினமாக உழைக்கிறோம் வெற்றி உடனே கைக்கு வருவதில்லை. அப்போது, கடவுள் எங்கே என கேட்கிறோம். நமது உழைப்பும், உணர்வும், சத்தியத்தின் மீது இருக்கும் என்றால், உள்ளபூர்வமாக இருக்கும் என்றால், அப்பழுக்கற்ற ஈடுபாட்டுடன் இருந்தால், வெற்றி என்பது இறைவனால் கூட தடுக்க முடியாது.  கம்பனுடைய கட்டுத்தறியும் கவி பாடும் என்று சொல்வார்கள். அந்த கம்பனுக்கும், ஒரு சடையப்ப வள்ளல் தேவைப்பட்டது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் இறுதி ஆசையான, ஆதினத்தின் மருத்துவமனையை, இத்தனை சடையப்ப வள்ளல்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். நம்முடைய மடம், ஆன்மிகத்தையும், சுய கட்டுப்பாட்டையும், சுய ஒழுக்கத்தையும் பேணி வளர்க்கிறது. இறைவன் முன் அனைவரும் சமம். போற்றுவதற்கும், தூற்றுவதற்கும் காரணமாக இருக்க வேண்டியது அவனது குணமே தவிர, குலம் அல்ல என, சாந்தலிங்க ராமசாமி அடிகளார் கூறும்போதுதான் அனைவரும் உணர்ந்தனர். ஆன்மிகம் இல்லாத எந்த இடத்திலும், ஒழுக்கத்தை நிலை நாட்டுவது சற்று கடினம் தான். நார்த்திகம் என்பது நமது சமுதாயத்திற்கு புதியதல்ல. எல்லா காலகட்டத்திலும் நார்த்திகம் இருந்தது. ஆனால், நார்த்திகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அப்பழுக்கற்றதாக, நல்லதை மட்டும் சிந்திக்கின்றதாக, ஒழுக்கத்தையும், நேர்மையும் பேணுவதாகவும், கடவுளே இல்லை சொல்லிக் கூட, தனிமனிதன் ஒழுக்கத்தில் நிலை தவறாமல் இருப்பது தான் நார்த்திகம். செய்வதெல்லாம் செய்துவிட்டு, கடவுள் இல்லை. என்னை சீர்படுத்துவதற்கு இறைவன் தேவையில்லை என்பது நார்த்திகம் அல்ல. இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் இந்த யுகம் நமக்கு போதாது. இதுபோன்ற பல அனுபவத்தை இந்த மடத்தில் பெற்றுள்ளேன்.  தமிழை வளர்க்க, பேரூர் ஆதீனம் மேற்கொள்ளும் முயற்சிகள் அளப்பரியது. விளம்பர யுகத்தில், விளம்பரமே இல்லாம செய்ய வேண்டும். அந்த உணர்வைத்தான் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரிடம் இருந்து பெற்றேன். அது கூட எனது தேர்தல் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அப்போதும் கூட மனது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால், நல்லது இந்த மண்ணிலே வெற்றி பெற வேண்டும். மோடி, 25 ஆண்டுகாலம், முதல்வராக, பிரதமராக இருக்கிறார். நான் பல பிரதமர்களுடன் பழகியுள்ளேன். ஆனால், அவர்களெல்லாம் பெறாத வெற்றியை, மோடி எப்படி பெற்றார். மோடி எப்போதும், தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுகின்றதா, அவ்வாறு செயல்படும் திட்டங்களின் பயன்கள் சாதாரண குடிமகன்களுக்கு எந்த அளவு சென்றடைகிறது என்பதையும் பார்க்கிறார். அதனால்தான், மகத்தான வெற்றி பெறுகிறார். நவராத்திரி விழாவில், அனைத்து நாட்களும், உணவு இன்றி, வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு, அதோடு, தனது தினசரி அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.


சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் செவி கொடுத்து கேட்பாரா, தமிழில் சொன்னால் கேட்க மாட்டாரா என பலருக்கு சந்தேகம் உள்ளது. இறைவன், சமஸ்கிருதத்தில் வழிபடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. தமிழில் வழிபட வேண்டாம் எனவும் எங்கும் சொல்லவில்லை. சமஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதன் மூலம் தமிழ் ஒருபோதும் வளர முடியாது. அதேபோல, தமிழ் ஒரு தீண்ட தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இதையெல்லாம் சரியான நோக்கோடு, நடுநிலையோடு பார்த்து செயல்படக்கூடியது தான் பேரூர் ஆதினம்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !