சுப்பிரமணியர் திருக்கல்யாணத்தில் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போன ஒரு தேங்காய்!
போடி; போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். ஏழாம் நாளான நேற்று முருகனுக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய பூஜையும், வள்ளி, தெய்வானையுடன் தேவசேனா சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ.3 லட்சத்தி 3 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் போடி சில்லமரத்த்துப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், பி.அம்மாபட்டியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மணிகண்டன் ரூ.ஒரு லட்சத்து 85 ஆயிரம் வரை ஏலம் கேட்டார். ராஜன் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.