காஞ்சிபுரம் வரதர் கோவில் பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை; உதவி கமிஷனர் விளக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை, இருக்கும் பல்லி சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டது இல்லை என, கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு மூலையில் உள்ள பல்லி சிலைகளை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு, சகல பாவங்களும் நீங்கும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல்லியை தொட்டு வணங்குவது வழக்கம். கோவிலில் திருப்பணி நடப்பதால், பல்லி தரிசனம் தற்காலிகமாக தெற்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலில் உள்ள பல்லி சிலைகளை மாற்ற முயற்சி நடப்பதாக, திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், பழமையான பல்லி சிலைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவற்றை மாற்ற முயற்சி நடப்பதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி, கோவிலில் உள்ள பல்லி சிலைகள் பற்றியும், அவை உள்ள இடத்தையும் காண்பித்து விளக்கினார். கோவிலில் உள்ள பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை எனவும், அவை தங்க பல்லியே இல்லை எனவும், உதவி கமிஷனர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:ரங்கராஜ நரசிம்மன் என்பவர் கொடுத்த புகார் பொய்யானது.
கோவிலில் உள்ள பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை. விசாரணைக்கு வந்த போலீசாரிடமும் பல்லி சிலைகள் காண்பிக்கப்பட்டன. அவர்களும் நாங்கள் கொடுத்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டனர். தங்க பல்லி என பலரும் கூறுகின்றனர். ஆனால், அவை தங்க பல்லியே கிடையாது. பித்தளையால் செய்யப்பட்டது. கோவிலில் மூன்று செட் பல்லி சிலைகளும், சூரியன் மற்றும் சந்திரன் சிலைகளும் உள்ளன. ஒன்று மிக பழமையானது. அவை நகை கொட்டடியில் உள்ளன. மற்றொன்று 1970ல், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கொடுத்த பல்லி சிலைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால், பழுதடைந்து காணப்படுகிறது. பல்லி சிலைகள் கைகளில் கீறுவதால், அவற்றை மாற்றி, 2012ல், உபயதாரர் ஒருவர் கொடுத்த பல்லி சிலைகளை வைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். கமிஷனர் உத்தரவு இல்லாமல், பல்லி சிலைகள் மாற்ற முடியாது. கோவிலுக்கான 3 செட் பல்லி சிலைகளும் கோவிலில் தான் உள்ளன. அவை எங்கும் மாயமாகவில்லை. ரங்கராஜ நரசிம்மன் விளம்பரம் தேடவே இதுபோன்ற புகார்களை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தங்க பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்த விளக்கத்தை காஞ்சி மண்டல இணைக் கமிஷனர் அறிக்கையாக அளிப்பார். - சேகர் பாபு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்