குழந்தை வரம் அருளும் ஹோலே தேவம்மா
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை என்றால், அது குறையாகவே இருக்கும். கோவில்களில் பூஜை, புனஸ்காரம் நடத்தி, கடவுள் கருணையால் குழந்தை வரம் பெறுவர். கர்நாடகாவில் குழந்தை வரம் அருளும் கோவில்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஒன்று ஹோலே தேவம்மா கோவில்.
அரண்மனை நகரமான மைசூரின் நஞ்சன்கூடு தாலுகா கடவடிபுரா கிராமத்தில் கபிலா ஆற்றங்கரையோரம், வயல்வெளிகளுக்கு நடுவே தேவம்மா கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு அரிசி, சேலை, தாலி படைத்து, குழந்தை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர். அம்மன் ஆசியால் குழந்தை வரம் கிடைத்ததும், தவறாமல் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், கோவிலில் சிறப்பு பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நேரத்தில் மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், துமகூரு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
குடும்ப கஷ்டம், தீராத பிரச்னைகளால் அவதிப்படும் பக்தர்கள் இங்கு வந்து, அம்மனிடம் தங்கள் கஷ்டங்களை மனம் விட்டு சொல்லி வேண்டிச் செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள பசுமையான சூழல், எத்தகைய கஷ்டத்தில் வரும் பக்தர்கள் மனதை சாந்தப்படுத்துகிறது.
ஹோலே தேவம்மா கோவில் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, இயற்கை அழகை ரசிக்க வருவோருக்கு, அமைதியான உணர்வை வழங்கும் இடமாக உள்ளது என, கிராம மக்கள் கூறுகின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து கடவடிபுரா கிராமம் 190 கி.மீ., துாரத்தில் உள்ளது. மைசூரில் இருந்து 46 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர் சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சன்கூடு சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம். ரயிலில் சென்றால் நஞ்சன்கூடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம். தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.