உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுதில்லி சிருங்கேரி மடத்தில் விசேஷ பூஜை செய்த ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள்

புதுதில்லி சிருங்கேரி மடத்தில் விசேஷ பூஜை செய்த ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள்

புதுதில்லி: புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திங்கட்கிழமை காலை கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு ஸ்ரீ சந்திர மெளலீஸ்வர ஸ்படிக லிங்கத்திற்கு விசேஷ பூஜை செய்தார்.

கி.பி. 788ல் காலடியில் பிறந்து 820ம் ஆண்டு கேதாரத்தில் ஈசனுடன் கலந்த ஸ்ரீ ஆதி சங்கரர் மூன்று முறை பாரத தேசத்தினை வலம் வந்தார். ‘அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சமே’ எனும் மேலான அத்வைத சித்தாந்தத்தினை பரப்பி மக்களை ஒன்றிணைத்தார். தம் காலத்திற்குப் பிறகு சனாதன தர்மத்தை மக்கள் என்றென்றும் கடைப்பிடிக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் பாரதநாட்டின் நான்கு திசைகளில் முறையே கிழக்கில் புரீ க்ஷேத்திரத்திலும், தெற்கில் சிருங்கேரியிலும், மேற்கில் துவாரகையிலும், வடக்கில் பத்ரியிலும் நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தார். இயற்கையாகவே பகைமை பாராட்டும் பாம்பும், தவளையும் சிருங்கேரியில் பகைமை துறந்து அன்பு பாராட்டுவதைப் பார்த்த ஆதிசங்கரர், துங்கா நதியின் கரையில்  நான்கு ஆம்நாய பீடங்களில் முதலாவதாக, தக்ஷிணாம்நாய ஶ்ரீ சாரதாபீடத்தை  சிருங்கேரியில் நிறுவினார். தமது வாழ்நாளிலேயே கைலாயம் சென்று ஸ்ரீ பரமசிவனை தரிசித்து ஐந்து ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர ஸ்படிக லிங்கங்களை பெற்று வந்தார். தாம் ஸ்தாபித்த நான்கு பீடங்களுக்கும் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னிதிக்கும் ஸ்ரீ ஆதிசங்கரரால் அளிக்கப்பட்ட அந்த ஸ்படிக லிங்கங்கள் இன்றும்  ஆராத்ய தெய்வமாக பூஜிக்கப்பட்டு வருகின்றன. தவிர சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் இதனுடன் பூஜையில் உள்ள  ரத்ன கர்ப்ப கணபதி விக்ரஹமும் ஸ்ரீ ஆதிசங்கரரால் வழங்கப்பட்டது ஆகும்.

சிருங்கேரியில் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி மூன்று வேளையும் ஆராதனை இடை விடாமல் நடைபெறுவதுடன், இரவு ஸ்ரீ சந்திர மெளலீஸ்வரர் பூஜையினை ஸ்ரீ சுவாமிகளே நிகழ்த்துவார். சிராவண மற்றும் கார்த்திகை சோமவாரம் போன்ற விசேஷ நாட்களில் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் ஸ்ரீ சந்திர மெளலீஸ்வர ஸ்படிக லிங்கத்திற்கு நடைபெறும். இதன்படி திங்கள் காலை ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் சிருங்கேரியிலும், ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் புதுதில்லியிலும் கார்த்திகை சோமவார பூஜையினை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !