திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெரிய ஜீயர் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவம் நவ.8-ஆம் தேதி கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 5-ஆம் திருநாளான புதன்கிழமை பரிமள ரெங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பெருமாள் உற்சவமூர்த்திகள் மங்களகிரியில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெரிய ஜீயர் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு, பரிமள ரெங்கநாதரை சேவித்தார். அப்போது பக்தர்கள் பெரிய ஜீயர் சுவாமிகளிடம் அருளாசி பெற்றனர். தொடர்ந்து, நான்கு வீதிகளில் வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து பரிமள ரெங்கநாதரை வழிபட்டனர்.