உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருக்ஷேத்திர பூமியில் சிருங்கேரி விதுசேகர பாரதீ சுவாமிகள்; சாமர சேவை செய்து வழிபாடு

குருக்ஷேத்திர பூமியில் சிருங்கேரி விதுசேகர பாரதீ சுவாமிகள்; சாமர சேவை செய்து வழிபாடு

புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று செவ்வாய் அன்று குருக்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்தார். அங்கு அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் சதுர் வேத பாராயணங்களுடன் தலைவர் சுமந்த் ரெட்டி மற்றும் வேத விற்பன்னர்களால் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு எழுந்தருளியிருக்கும் வெங்கடாசலபதி சுவாமிக்கு, ஸ்ரீ சுவாமிகள் சாமர சேவை செய்தபின் மஹாலட்சுமி, கோதா தேவி சன்னதிகள், பிரம்மசரோவர் ஏரி மற்றும், திரெளபதி தீர்த்தம்(கிணறு) ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார். மஹாபாரத போரின் கடைசி தினத்தன்று இந்த ஏரியில் ஒளிந்து கொண்ட துரியோதனனை, பீமன் கொன்றதாக ஐதீகம். இந்த கிணறு கட்டப்பட்டிருக்கும் செங்கல்களின் மூலம் சுமார் 5000 வருட பழமையானதாக இருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தவிர துச்சாதனனை பீமன் கொன்றபின், திரெளபதி இக்கணற்றில்தான் குளித்து தமது சபதத்தினை முடித்துக்கொண்டாள் எனும் ஐதீகமும் நிலவுகிறது.


அதன்பின் சுவாமிகள் கீதா ஞான சமஸ்தான், கிருபா பிஹாரி கோவில் மற்றும் கீதா அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இங்கு உலகம் முழுவதிலிருமிருந்தும் சேகரிக்கப்பட்ட அரிதான பகவத்கீதை தொகுப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பின் மஹாபாரதத்துடன் தொடர்புள்ள பத்ரகாளி மற்றும் ஸ்தானேஸ்வர் மஹாதேவ கோவிலுக்கும் சென்றார். பாண்டவர்கள் மஹாபாரத யுத்தத்தில் ஜெயித்த பின் இந்த பத்ரகாளி கோவிலில் குதிரை மற்றும் ரதங்களை காணிக்கையாக செலுத்தினர் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் இப்போதும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக வெள்ளி அல்லது மண்ணால் ஆன குதிரைகளை இக்கோவிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஸ்தானேஸ்வரர் கோவிலில் உள்ள மூர்த்தியானது, பரம சிவனை முதன்முறையாக லிங்க வடிவில் பிரம்மா பூஜித்ததாக எண்ணப்படுகிறது. இக்கோவிலின் பன்ஸி புரி மஹராஜ், லக்ஷ்மி புரி மஹராஜ் மற்றும் மகேஷ் முனிஜி ஆகியோர் ஸ்ரீ சுவாமிகளுக்கு தூளிபாத பூஜை செய்தனர்.


அதன்பின் ஜெயராம் வித்யா பீடத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஆசார்யாள், அங்குள்ள கதா மண்டபத்திற்கு பூமி பூஜை செய்து, கீதா ஜயந்தி மஹோத்சவத்தினை துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகளும் இவ்விடத்திற்கு எழுந்தருளி ஆசீர்வாதம் செய்துள்ளார். அன்று மாலை கிருஷ்ணா அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஆசார்யாள், அங்குள்ள 1000 வருடத்திற்கும் மேலான பல கிருஷ்ண விக்ரஹங்களையும், அரிய படங்களையும் பார்வையிட்டார். அதன்பின் பீஷ்ம குண்ட், பீஷ்ம பாண ஸ்யாம் மந்திருக்கும் விஜயம் செய்தார். குருக்ஷேத்திரத்தின் முக்கிய இடம் எனப் போற்றப்படும் ஜ்யோதிசார், இதுவே பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தம் சீடரான அர்ஜுனனின் மூலம், உபநிஷத்துகளின் சாரத்தை 700 சுலோகங்களில் எடுத்துரைத்து, அத்வைத தத்துவத்தினை விளக்கும் பகவத்கீதையை அருளிய, ஜகத்குரு ஆதிசங்கராசார்யர் அவர்கள் அடையாளம் காட்டிய புனிதத் தலத்திற்கு எழுந்தருளினார்.


இப்புனித தலத்தில், 1991ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் கூட தவறாமல் தினசரி பகவத் கீதையினை பாராயணம் செய்து வரும் இறைசெல்வர் கோகாசிங் என்பவரை ஸ்ரீ ஆசார்யாள் பிரசாதம் அளித்து ஆசீர்வதித்தார். அங்கு “மெய்நிகர் யதார்த்த (Virtual Reality)” காட்சித் திட்டத்தின் ஏற்பாடுகள் ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளுக்கு காண்பிக்கப்பட்டன. பகவத் கீதை ஜயந்தியை முன்னிட்டு வரும் நவம்பர் 25 ஆம் தேதி, மாண்புமிகு பிரதமர் அவர்களால் இது திறந்து வைக்கப்பட உள்ளது. அங்கு நிகழ்த்திய அருளுரையில் குருக்ஷேத்திர பூமியின் பெயர் கிருஷ்ண யஜுர் வேதத்திலேயே காணப்படுகிறது என அறிவித்த ஸ்ரீ சுவாமிகள் சில பகவத் கீதை ஸ்லோகங்களுக்கு அர்த்தத்தையும் ஆழமான விளக்கத்தையும் வழங்கியபோது, அங்கு இருந்த பண்டிதர்களும், அறிஞர்களும் அதனை ஆச்சரியத்துடன் கேட்டனர்.  “இவ்வாறு ஒரு புதிய கோணத்தில், இதுவரை எவரிடமும் கேட்காத வகையில், இவ்விளக்கங்களை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு ஒரு தெய்வீக அனுபவம்” என ஒருமித்து கூறினர். ஹரியானா மாநிலத்தின் அரசு விருந்தினர் மரியாதை அளிக்கப்பட்டிருக்கும் சிருங்கேரி ஜகத்குரு அவர்களுக்கு உரிய அரசு மரியாதைகளையும், விஜயத்திற்கான ஏற்பாடுகளையும் தலைமை தகவல் ஆணையர் டி.வி.எஸ்.என்.ப்ரசாத், தலமை செயலர் அனுராக் ரஸ்தோகி, காவல் துறை அதிகார் ஓ.பி.சிங் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் செய்திருந்தனர். பின்னர் ஸ்ரீ சுவாமிகள் புதுடில்லி ஸ்ரீ மடத்திற்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !