பழநி முருகன் கோயில் ரோப் கார் உறுதித் தன்மை சோதனை
பழநி; பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவையில் நான் டிஸ்டர்டிவ் சோதனை நடந்தது.
பழநி முருகன் கோயில் செல்ல ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. ரோப்கார் மூலம் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் சென்று வரலாம். இதில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பயணம் புரிகின்றனர். ஒரு பெட்டிக்கு மூன்று பேர் வீதம் நான்கு பெட்டிகளுக்கு 12 பேர் ஒருமுறை செல்லலாம். இந்நிலையில் ரோப் கார் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பாலங்கள் அது இணைக்கப்பட்டுள்ள வெல்டிங் உறுதி தன்மையை சோதிக்கும் (என்.டி.டி) நான் டிஸ்டர்டிவ் சோதனை நவ., 13, 14 ஆகிய இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல், தொழிலக ஆய்வு மைய, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்திலிருந்து பொறியாளர்கள் நான்கு பேர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் காந்தம் மற்றும் வேதியல் பொருட்களைக் கொண்டு வெல்டிங் இணைப்புகளை உடைக்காமல் ஆய்வு செய்து உறுதித் தன்மையை சோதனை செய்தனர். சோதனை பணிகள் இன்று நிறைவு பெற உள்ளது சோதனை பணிகள் நிறைவு பெற்ற பின் நாளை முதல் ரோப் கார் வழக்கம் போல் இயங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.