உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்

பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப்கார் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் ஆன்மிக, சுற்றுலா பகுதியாக விளங்கும் பிரான்மலை, பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியது. பாரி ஆண்ட பறம்புமலை என்றும் போற்றப்படுகிறது. இம்மலை அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவன் பார்வதி கோயில் கொண்டுள்ளனர். மலை உச்சியில் பாலமுருகன், விநாயகர் கோயில்களும், தர்காவும் உள்ளன. மலை முழுவதும் பல இடங்களில் புண்ணிய தீர்த்தங்களும் பரிவார தேவதை கோயில்களும் உள்ளன. இம்மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்துசெல்லும் நிலையில் இதன் உயரமும் துாரமும் பலருக்கு தடையாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மலையில் ஏறுவது சிரமமான காரியமாக உள்ளது. இம்மலை உச்சிக்குச் செல்ல ரோப் கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் சுற்றுவட்டார மக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஏ.வி.நாகராஜன், சமூக ஆர்வலர், பொன்னடப்பட்டி; புராண,வரலாற்றுச் சிறப்புடன் ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா பகுதியாகவும் விளங்கும் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வழிபாட்டுத் தலங்களும் கண்டுகளிக்க கண்ணுக்கு இதமான மலைத்தொடர்களும் உள்ளன. இம்மலை உச்சியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலவண்ணாரிருப்பு அருகே இருந்து பிரான்மலை உச்சி வரை இடைப்பட்ட நிறுத்தங்களுடன் ரோப்கார் இயக்க முடியும். தமிழக அரசு இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்றினால் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருப்பதுடன் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாறி அரசுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !