மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம்
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் மழையில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபாடு.
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டமானது தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கொட்டும் மழையில் கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி 1 மணி அளவில் மீண்டும் நிலையை அடையும். பின்னர் மதியம் 2.00 மணி அளவில் காவிரிகரை நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.