தேவாமங்கலத்தில் தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சை
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐம்பொன்னால் 18 படிகளை அமைத்து தத்ரூபமாக ஐயப்பன் சிலை வடிவமைக்கப்பட்டதால் சபரி மலையை நினைவுபடுத்ததாக ஐயப்ப பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் தங்களுடைய சொந்த ஊரில் ஐயப்பனுக்கு என்று தனி கோவிலை அமைப்பதற்கு ஐயப்ப பக்தர்கள் முன்வந்து ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு கோவிலை எழுப்பி கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி கடந்த 14 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்தது. அதனை தொடர்ந்து ஐயப்ப சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தர்மசாஸ்தா கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று பக்தி கரகோஷங்களை எழுப்பினர். பின்னர் தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 18 படிகள் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு ஐம்பொன்னால் அமைக்கப்பட்ட ஐயப்பன் தத்ரூபமாக அமைக்கப்பட்டு அருள்பாலித்தது சபரிமலையை நினைவுபடுத்துவதாக ஐயப்ப பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற விழாவில் தேவமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.