காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு; சுவாமிக்கு தீர்த்தவாரி.. பக்தர்கள் புனித நீராடி தரிசனம்
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடி இறைவனை தரிசித்தனர்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார். அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் இருந்து மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரியில் வழிபாடு நடைபெற்றது. அதனை அடுத்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.