உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை பிறந்தது.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை பிறந்தது.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். 


கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பனின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் எட்டுத்திக்கும் ஒலிக்கும். 2025-ம் ஆண்டு தமிழ் கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில்,ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கம்,மேட்டுப்பாளையம் ரோடு ஐயப்பன் கோவில், சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 ஆகிய கோவில்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று முதல் சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து சுவாமி ஐயப்பனை வழிபட்டனர். அதேபோன்று ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கத்தின் 75-ம் ஆண்டு விழாவையொட்டி கார்த்திகை மாத பிறப்பு சிறப்பு பூஜைகள்  இன்று முதல் ஆரம்பமாகின்றன. இதையொட்டி பூஜா சங்கத்தின் நுழைவாயிலில் உள்ள சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தி பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. சுவாமி ஐயப்பனின் திருவுருவ சிலைக்கு பால், தேன் . பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி ஐயப்பனின் அருளை பெற்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஐயப்ப சுவாமி கோவிலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியும், மாலை அணிவித்தலும் நடைபெற்றது. தொடர்ந்து இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !