உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா; இன்று காலை 10 மணிக்கு புட்டபர்த்தி வருகிறார் பிரதமர் மோடி

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா; இன்று காலை 10 மணிக்கு புட்டபர்த்தி வருகிறார் பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் இன்று நடக்கும், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.


ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ.,23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார்.


புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர். இதையொட்டி, புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது; வரும் 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று காலை புட்டபர்த்தி வருகிறார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகாசமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து காலை 10:30 மணியளவில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார்.


கோவையில் விவசாய மாநாடு பின்னர் புட்டபர்த்தியில் இருந்து மதியம் விமானத்தில் கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை, மதியம் 1.30 மணிக்கு துவக்கி வைக்கிறார். இவ்விழாவிற்கு கவர்னர் ரவி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து, பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 21வது தவணையாக, ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்து சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மாநாட்டு வளாகத்தில் தனித்த அரங்கில், தென்னிந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடுகிறார். மாநாட்டில், இயற்கை வேளாண்மை சார்ந்து 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைகின்றன. இந்த அரங்குகளையும், காட்சிப்படுத்தப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட உள்ளார். அதன்பின், மாலை 3.30 மணியளவில் டில்லி கிளம்புகிறார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !