திருப்பரங்குன்றம் மலைமேல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆய்வு
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக கோயில் சார்பில் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் தீப கொப்பரை வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் கோரிக்கையை வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டுகள் வழியாக மலைமேல் சென்றார். கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபம், நெல்லி தோப்பு, மலை உச்சியில் உள்ள தீபத்தூண் ஆகியவற்றை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மலை உச்சியிலுள்ள தீபத்தூணுக்கு அவர் சென்ற பொழுது இருட்டாகி விட்டதால் டார்ச் வெளிச்சத்தில் தீபத்தூணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். பின்பு அவர் புதிய படிக்கட்டுகள் வழியாக இரவு 7:15 மணிக்கு கீழே இறங்கி வந்து புறப்பட்டார். நீதிபதியுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள், மதுரை வீரன் ராஜதுரை உடன் சென்றனர்.
போலீஸ் ஜீப்பில் வந்த நீதிபதி:; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்ய போலீஸ் ஜீப்பில் வந்தார். ஆய்வு முடித்து அவரது காரில் புறப்பட்டார். மலையில் இருந்து இறங்கிய நீதிபதி, உடன் வந்த போலீசாருக்கு தனது காரில் இருந்த தண்ணீர் பாட்டில் கொடுத்து தாகம் தணித்தார்.