காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவார பணி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி போரூர் நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் கோவிலில், மூன்று நாட்கள் நடைபெறும் துாய்மைப்பணியை இன்று துவக்கினர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் டிச., 8 ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, 29 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை போரூர் நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர், கோவிலை மூன்று நாட்கள் சுத்தப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 8:00 மணிக்கு போரூர் நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர், ஏகாம்பநராதர் கோவிலில் துாய்மைப்பணியை துவக்கினர். இதில், கோவில் ராஜகோபுர வளாகத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி, வெளி பிரகாரத்தில் உள்ள சுவாமி கற்சிலைகளை சுத்தம் செய்தனர். பிருந்தாவனம், கோசாலை அமைந்துள்ள வளாகத்தில் வளர்ந்து இருந்த செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். ஆயிரங்கால் மண்டபத்தில் படிந்திருந்து துாசுகளை மின்மோட்டார் இயந்திரம் மூலம் தண்ணீரால் சுத்தம் செய்தனர்.