உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கார்த்திகை வழிபாட்டுக்கு உண்டாங்கல் மலை தயாராகுமா?

திருக்கார்த்திகை வழிபாட்டுக்கு உண்டாங்கல் மலை தயாராகுமா?

சோழவந்தான்: ‘சோழவந்தான் அருகே உண்டாங்கல் மலை முருகன் கோயிலை திருக்கார்த்திகை தீபத்திற்கு தயார் செய்ய வேண்டும்’ என அப்பகுதியினர் எதிர்பா்ர்க்கின்றனர்.


விக்கிரமங்கலம் - கருமாத்துார் ரோட்டில் முதலைக்குளம் ஊராட்சியில் உண்டாங்கல் மலை உள்ளது. இரண்டு பிரிவாக அமைந்துள்ள மலைக்குன்றுகளில் ஒருபுறம் சமணர் படுக்கைகள் உள்ளன. மற்றொரு மலையில் பழமையான முருகன் கோயில் அமைந்துள்ளது. மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு ஏராளமானோர் வழிபடுவர். வரும் டிச.4 ல் திருக்கார்த்திகை திருநாளையொட்டி கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.  


சமூக ஆர்வலர் பால்பாண்டி கூறியதாவது: விக்கிரமங்கலம், முதலைக்குளம் வட்டார மக்களின் பிரசித்தி பெற்ற தலம் இது. நுாறு அடி உயரத்தில் மலைக்குன்றில் உள்ள குகையில் பழமையான முருகன் சிலை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முருகனை வழிபடுவர். இக்கோயிலுக்கு செல்ல முறையான பாதை, தெரு விளக்கு வசதிகள் இல்லை. கரடுமுரடு பாதையில் செல்ல வேண்டியுள்ளது. செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிக்கிறது. கோயிலை மேம்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை. திருக்கார்த்திகை நெருங்குவதால், பாதையை சரிசெய்து, தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !