கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி துவக்கம்
மயிலாடுதுறை; திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணியை குருமகா சன்னிதானம் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் உள்ளது. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சித்தாந்தத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் ஒன்றாக திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் தியாகராஜ சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி தொடக்க விழா நடந்தது. கோமுத்தீஸ்வரர் கோவில் கொடிமரம் முன்பு திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் திருமுன்னர் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்ய தேர் திருப்பணியை குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். புதிதாக செய்யப்படும் தேர் 22 அடி அகலமும், சுவாமி சிம்மாசனம் வரை 22 அடி உயரமும் உடையது. இந்த தேர் திருப்பணியை ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அருளானையின் வண்ணம் கோவை அரண் பணி அறக்கட்டளை உபயமாக செய்து கொடுக்கிறது.