அயோத்தியில் பறந்தது காவி கொடி; மிண்டும் ஒரு புதிய அத்தியாயம்; கொடியேற்றி துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் முகூர்த்தத்தில் காவிக்கொடியை கொடியேற்றி, மிண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,25) தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 191 அடி உயரத்தில் வளர்பிறை பஞ்சமி அபிஜித் முகூர்த்தத்தில் பிரதமர் மோடி காவிக்கொடியை கொடியேற்றினார் முன்னதாக அயோத்தி வந்த பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியேங்கும் மக்கள் கூடி மலர் தூவி பிரதமரை வரவேற்றனர்.
ரோடு ஷோ: ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அயோத்தி ராமர் கோவில் வந்த பிரதமர், மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன் மற்றும் அன்னை சபரி ஆகியோருக்காக அமைக்கப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார், பின்னர், சேஷாவதார் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, காலை 11 மணியளவில் அன்னை அன்னபூர்ணா தேவி கோயிலில் தரிசனம் செய்து, பின்னர், ராம் தர்பார் அமைந்துள்ள கர்ப்பகிரகத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அதையடுத்து குழந்தை ராமர் இருப்பதாக கருதப்படும் கர்ப்பகிரகத்திலும் அவர் தரிசனம் செய்தார்.
பறந்தது காவி கொடி; சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நண்பகல் 12 மணி அளவில், ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலின் சிகரப்பகுதியில் வழக்கப்படி காவி நிறக் கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வின் மூலம் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கிறது. இது கலாச்சார ஒற்றுமைக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு சிறப்புரையாற்றினார்.
கொடியில் இருப்பது என்ன?; ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொடியில் ராமனின் குல முன்னோரான சூரிய பகவான், ஓம் என்னும் உலக ஆரம்பத்தில் உண்டான பிரணவ சொல் மற்றும் கோவிதார் மரம் எனப்படும் செம்மந்தாரை மரம் போன்றவைகள் உள்ளது. கோவிதார் எனப்படும் செம்மந்தாரை மரம் பாரிஜாதம் மற்றும் மந்தாரை மரத்தின் கூட்டு மரமாகும். இந்த மரத்தை உருவாக்கியவர் காஷ்யப முனிவர்.