எதிர்கால சந்ததியினரை பற்றி சிந்திப்போம்.. இந்திய தேசத்தை வலுப்படுத்துவோம்; அயோத்தியில் பிரதமர் உரை
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா முன்னிட்டு ஒட்டு மொத்த தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம்.
ஒற்றுமை, தெய்வீகம்: வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது. இந்த காவிக்கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது. உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது. அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் போது, சப்த மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது.
இதுதான் முக்கியம்: 21ம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு புதிய வளர்ச்சியை வழங்கி வருகிறது. இப்போது அயோத்தி வளர்ச்சி அடைந்து வரும் மாற்றம் இந்தியாவிற்கு முதுகெலும்பாக திகழ்கிறது. ராமர் நம்முடன் இணைவது உணர்ச்சிகள் வாயிலாக தான், வேறுபாடுகள் மூலம் கிடையாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு ஒரு நபரின் பரம்பரை முக்கியம் கிடையாது. அவர்களின் பக்தி தான் முக்கியம். ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
2047க்குள்...!; கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர். நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பகவத் பேசியதாவது; "இந்து சமூகம் 500 ஆண்டுகளில் அதன் உரிமையை நிரூபித்தது, அதன் பிறகு 30 ஆண்டுகளில் ராம் லல்லா இங்கு வந்தார், கோயில் கட்டப்பட்டது. உண்மையின் அடிப்படையில் உலகிற்கு தர்மத்தை வழங்கும் ஒரு பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும்... இந்த தர்மத்தை, இந்த அறிவை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும்; இந்த செயல்முறை தொடங்கிவிட்டது. இந்த சின்னத்தை (ராம் மந்திர்) பார்த்து, அதிலிருந்து உத்வேகம் பெற்று, சவால்களை எதிர்கொண்டாலும், இதை நோக்கி நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்... உலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பரப்பும் ஒரு பாரதத்தை, வளர்ச்சியைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்கும் ஒரு பாரதத்தை உலகம் எதிர்பார்க்கிறது. அது நமது கடமை. ஸ்ரீ ராம் லல்லாவின் பெயரை எடுத்துக்கொண்டு இந்த செயல்முறையை விரைவுபடுத்துவோம்..." என்றார்.