உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திருக்கார்த்திகை; தீப லட்சுமி அருளால் அனைவருக்கும் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கட்டும்!

இன்று திருக்கார்த்திகை; தீப லட்சுமி அருளால் அனைவருக்கும் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கட்டும்!

திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி வழிபடுதல், கோயிலில் மலைதீபம் தரிசித்தல் சிறப்பு. விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கிறது வேத புராணங்கள்.

அக்கினியின் வாயிலாக விளக்கேற்றி வழிபடுவது பெரும் யாகத்திற்கு நிகரானது. 


இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு பல காரணம் கூறப்படுகிறது. அதில் ஒன்று.. ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.


தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான். இன்று வீட்டில் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபட வாழ்வும் சிறக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !