உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபம்; பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு துவங்கியது.. எட்டுதிக்கும் ஒலிக்கும் அரோகரா கோஷம்

திருவண்ணாமலை தீபம்; பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு துவங்கியது.. எட்டுதிக்கும் ஒலிக்கும் அரோகரா கோஷம்

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் மூல கருவறையில், சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க, நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து மடக்குகளில், தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில்  பஞ்ச மூர்த்திகளும்,  மாலை, 4:30 மணி முதல்மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி வருகின்றனர். மஹா தீபத்தை காண மலையை நோக்கியவாறு லடசக்கணக்கான பக்தர்கள் அமர்ந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !